சிறையில் தனி சலுகை: சசிகலாவுக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்- நாஞ்சில் சம்பத்

பெங்களூர் சிறையில் தனி சலுகை வழங்கப்பட்டதாக சசிகலாவுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள் என அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சிறையில் தனி சலுகை: சசிகலாவுக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்- நாஞ்சில் சம்பத்
Published on

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து இருப்பதாக டி.ஐ.ஜி. ரூபா கூறியிருப்பது பற்றி அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

சசிகலா மீதான புகார் அபத்தமானது. அடிப்படை ஆதாரம் இல்லாதது எந்த விதமான உண்மையும் இல்லை. டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரி பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து இருப்பதன் மூலம் இதை நாம் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் கூறியதை அவரை விட உயர் அந்தஸ்தில் உள்ள டி.ஜி.பி. மறுத்து இருக்கிறார்.

இரு அதிகாரிகள் மத்தியில் கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. அதில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

ஏற்கனவே ஜெயலலிதாவுடன் சசிகலா சிறைவாசம் இருந்த போது எந்த பார்வையாளரையும் சந்திக்க அனுமதித்தது இல்லை. சிறைத்துறை விதிக்கு உட்பட்டே இப்போது சந்திக்கிறார். நான் ஆர்வத்துடன் அவரை சந்திக்க சென்றபோது புகழேந்தி மற்றும் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த அளவுக்கு கட்டுப்பாடு உள்ளது.

புகழேந்தி வெளியில் இருந்து உணவு கொண்டு வரட்டுமா என்று கேட்டபோது அதை சசிகலா மறுத்துவிட்டார். ஜெயிலில் வழங்கப்படும் உணவே போதும் என்று கூறிவிட்டார்.

ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் விடுதலையாவார் என்று கோடிக்கணக்கான தொண்டர்கள் நம்பிக்கையில் இருக்கும் நிலையில் அதை தடுக்கும் வகையில் அவரை களங்கப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

இதற்காக பெண் அதிகாரியை யாரோ தூண்டி விடுகிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது ஓரிரண்டு நாளில் தெரிந்து விடும். டி.ஜி.பி. சொன்ன கருத்தை நான் நம்புகிறேன். நாடு நம்புகிறது.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.


கர்நாடக மாநில அமைப்பாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

சசிகலா எப்போதும் சிறையில் தனக்கு சிறப்பு வசதியோ, உணவோ வேண்டும் என்று கேட்டதில்லை. இது அம்மாநில அதிகாரிகளுக்கு இடையேயான மோதல். இதில் தேவையில்லாமல் சசிகலா பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். சசிகலா முன்பு வழக்கு விசாரணைக்கு பெங்களூர் வந்த போது அவர் தங்கி இருந்த ஓட்டலில் சாதாரண உணவுகளைத்தான் சாப்பிட்டார். தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை களங்கப்படுத்தவே இது போன்ற புகாரை கிளப்பி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com