

நாமக்கல்:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ-ஜியோ) சார்பாக ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்வதாக அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று காலை நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள பூங்கா சாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடவடிக்கை குழு நிர்வாகி ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருக செல்வராஜன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், சி.பி.எஸ்.யை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்திட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும். சிறப்பு கால முறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை வழங்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் நேராக பூங்கா சாலைக்கு சென்று அங்கு மறியல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனிலும், பஸ்சிலும் ஏற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.