நாக்பூர் டெஸ்ட்: முரளி விஜய், புஜாரா சதம்; விராட் கோலி அரைசதம்- இந்தியா 312/2

நாக்பூரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முரளி விஜய் மற்றும் புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளனர். விராட் கோலி அரைசதம் அடித்துள்ளார். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது.
நாக்பூர் டெஸ்ட்: முரளி விஜய், புஜாரா சதம்; விராட் கோலி அரைசதம்- இந்தியா 312/2
Published on

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 8 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடனும களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 26.2 ஓவரில் 50 ரன்னைத்தொட்டது. முரளி விஜய் 112 பந்தில் 6 பவுண்டரியுடனும், புஜாரா 145 பந்தில் 7 பவுண்டரியுடனும் அரைசதம் அடித்தனர். இந்தியா 41.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

அரைசதம் அடித்த பின்னர் முரளி விஜய் அதிரடியாக விளையாடினார். அவர் 187 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். 2-வது அரைசதம் அடிக்க 75 பந்துகளே எடுத்துக் கொண்டார். இந்த சதம் மூலம் 52 டெஸ்ட் போட்டிகளில் 10 சதம் அடித்துள்ளார். மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முரளி விஜய், அதன்பின் தற்போதுதான் இந்திய அணியில் இடம்பிடித்தள்ளார். சர்வதேச போட்டியில் இடம்பிடித்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இவரது சதத்தால் இந்திய அணி 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. முரளி விஜய் 106 ரன்னுடனும், புஜாரா 71 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் விஜய் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவர் 221 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 75.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் - புஜாரா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்தது.

அடுத்து புஜாராவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி ஒருநாள் போட்டியை போன்று விளையாட புஜாரா சதம் அடித்தார். அவர் 246 பந்தில் 11 பவுண்டரியுடன் சதம் அடித்தார். விராட் கோலி 66 பந்தில் அரைசதம் அடித்தார்.

இருவரும் 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை நிலைத்து நின்று விளையாடினார்கள். இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 121 ரன்களுடனும், விராட் கோலி 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com