அணிகள் ஒன்று சேராவிட்டால் ரகசியங்களை வெளியிடுவேன்: நாகராஜன் எம்.பி. மிரட்டல்

அ.தி.மு.க.வில் பிரிந்துள்ள அணிகள் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியது இருக்கும் என தினகரன் ஆதரவு எம்.பி. நாகராஜன் மிரட்டல் விடுத்துள்ளார்.
அணிகள் ஒன்று சேராவிட்டால் ரகசியங்களை வெளியிடுவேன்: நாகராஜன் எம்.பி. மிரட்டல்
Published on

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன். டி.டி.வி. தினகரன் ஆதரவாளராக உள்ளார். இவர் இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தினகரன் அணியில் இருப்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் தொடந்து வந்து கொண்டு இருக்கிறது.

இன்று காலை என் கார் மீது அரசு பஸ் மோதியது. இதில் நான் இருப்பேன் என்று யாருடைய தூண்டுதலின் பேரில் பஸ் மோதியதா? அல்லது இயற்கையாகவே நடந்ததா? என்பது தெரியவில்லை.

தற்போது உள்ள அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் சசிகலா மூலமாகவே பதவிக்கு வந்தவர்கள். தற்போது இவர்கள் சசிகலாவை ஓரம் கட்டுவது ஏன்? நாளுக்கு நாள் அரசியல் மாறி வருகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது படத்தை ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார்கள். அவர் சிங்கம் போல இருந்தவர். சிகிச்சை படத்தை வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்த கூடாது என்பதற்காக வெளியிடவேண்டாம் என சசிகலா கூறினார். அவரை அவரது பிறந்த நாளிலேயே கழக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக கூறுவது என்ன நியாயம்?


அ.தி.மு.க.வின் அனைத்து தரப்பினரும் கலந்து பேசி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா அனைவரையும் சண்டை போட சொல்லியதா?

குற்றச்சாட்டுக்கு உள்ளாகுபவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். கருத்து வேறுபாடு உள்ளவர்களும் ஒதுங்கிக்கொள்ளுங்கள். சசிகலாவை ஒதுக்குபவர்கள் அவர் மூலம் கிடைத்த பதவிகளை திரும்ப தர வேண்டும். மேலும் சம்பாதித்த பணம் மற்றும் பொருட்களை கட்சிக்கு ஒப்படைக்க வேண்டும். நான் நன்றியுள்ளவன். அதனால்தான் இந்த அணியில் உள்ளேன்.

அ.தி.மு.க.வில் பிரிந்துள்ள அணிகள் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியது இருக்கும்.

தினகரன் அ.தி.மு.க. இயக்கத்துக்காகவே சிறைக்கு சென்றவர். அவரை ஓரங்கட்டுவதில் என்ன காரணம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com