4-வது வீரர் வரிசைக்கு டோனியே பொருத்தமானவர்: ரோகித் சர்மா

நான்காவது வீரர் வரிசைக்கு டோனி பொருத்தமானவர் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு பிறகு தெரிவித்துள்ளார்.
4-வது வீரர் வரிசைக்கு டோனியே பொருத்தமானவர்: ரோகித் சர்மா
Published on

இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கட்டாக்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. ராகுல் 48 பந்தில் 61 ரன்னும் (7 பவுண்டரி, 1சிக்சர்), டோனி 22 பந்தில் 39 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), மணிஷ் பாண்டே 18 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்துள்ளார்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டது. இதனால் 93 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. உபுல் தரங்கா அதிகபட்சமாக 23 ரன் எடுத்தார். யசுவேந்திர சஹால் 23 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்த்திக் பாண்டியா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

ராகுலின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு நாள் போட்டியில் இடம் பெறாத போதிலும் அவரது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. டோனியும், பாண்டேவும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

4-வது வரிசையில் ஆடிய டோனியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் இந்திய அணிக்காக அதிக போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த நபர். அவர் முன்னதாக களம் இறங்கிய போட்டிகளில் வெற்றிகளை பெற்று இருக்கிறார்.

இதனால் 4-வது வீரர் வரிசைக்கு அவர் பொருத்தமானவர். நீண்ட காலமாகவே டோனி ஆட்டத்தை முடித்து வைத்து இருக்கிறார். இதனால் நாங்கள் எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் இயல்பாக விளையாட விரும்புகிறோம்.

180 ரன் என்று போதுமான ஸ்கோரா என்று என்னால் உறுதியாக சொல்ல இயலாது. ஆனாலும் இந்த ரன்னை எடுக்க கடுமையாக போராடினோம்.

எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. சஹாலும், குல்தீப் யாதவும் முதல் ஓவரில் எப்போதும் விக்கெட் கைப்பற்றக் கூடியவர்கள். அவர்களது பங்களிப்பு எப்போதுமே சிறப்பாக இருக்கும்.

வேகப்பந்தில் ஹர்த்திக் பாண்டியா, பும்ரா உனட்கட் நன்றாக செயல்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடும் ஜெய்தேவ உனட்கட் தொடக்கத்திலேயே விக்கெட் சாய்த்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் திசாரா பெரைரா கூறியதாவது:-

ஆடுகளத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தேன். ஆனால் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதே நேரத்தில் இந்திய வீரர்களின் 2 சுழற்பந்து வீரர்கள் அபாரமாக வீசி எங்களை நிலைகுலைய வைத்தனர்.

எங்களது பேட்டிங் மோசமாக இருந்தது ஏமாற்றத்தை அளித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com