உயிர்பலிக்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம்- மலைகிராம விவசாயிகள்

குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயால் ஏற்பட்ட உயிர்பலிக்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகள் கூறியுள்ளனர்.
உயிர்பலிக்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம்- மலைகிராம விவசாயிகள்
Published on

உத்தமபாளையம்:

தேனி அருகே உள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலியானார்கள். இன்னும் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் மலைக்கிராம மக்களை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இதுகுறித்து குரங்கணி மலையடிவாரத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது,

அழகுராஜா:- குரங்கணி மலைப்பகுதியில் வருடத்திற்கு 8 மாதம் மழைப்பொழிவு அதிகம் இருக்கும். இந்த வழியாக கொழுக்குமலை சென்று அங்கிருந்து மூணாறுக்கு சென்றுவிடலாம். இந்த வனப்பகுதியில் ஏராளமான வாசனை பயிர்களான ஏலக்காய், மிளகு, கடுக்காய் உள்ளிட்டவை அதிகம் விளைகிறது.

எனவே இந்த பகுதி மூலிகை வாசம் வனப்பகுதி முழுவதும் பரவி உள்ளது. எனவேதான் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மலை ஏறும் பயிற்சிக்காக இங்கு வருகிறார்கள். ஆனால் இந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறையினரின் சோதனைச்சாவடியை தாண்டித்தான் செல்ல முடியும். வேறு வழி கிடையாது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது 40 பேரை வனத்துறையினர் அனுமதித்தது எப்படி? கையூட்டு பெற்றுக்கொண்டுதான் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு மனித உயிர்களோடு விளையாடி உள்ளனர். இந்த உயிர்பலிக்கு வனத்துறையினரே முழுக்காரணம். இனியாவது இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கோடை காலத்தில் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாபு:- தேனி மாவட்டத்தில் ஹைவேவிஸ் மலை, சுருளிமலை, குரங்கணி மலைப்பகுதி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. அதனடிப்படையில்தான் 40 பேர் சம்பவம் நடந்த அன்று வந்துள்ளனர். இவர்களை வனத்துறையினர் முறைப்படி அனுமதித்திருக்க வேண்டும். வனத்துறையினரின் அஜாக்கிரதையால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இனியாவது 10 பேர் கொண்ட குழுவாக பிரித்து அவருக்கு ஒரு வழிகாட்டி நியமித்து மலைஏறுவதற்கு அனுமதிக்கலாம்.

பரசுராமன்:- எங்களைப்போன்ற ஏழை விவசாயிகள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறையினர் பல்வேறு முட்டுக்கட்டை போடுகின்றனர். உள்ளூர்வாசிகளை வனப்பகுதிக்குள் நுழைய பல்வேறு கெடுபிடி செய்கிறார்கள். ஆனால் தற்போது ஏராளமானோரை அனுமதித்தது எப்படி? அதற்கு வனத்துறையினர் உரிய பதில் அளிக்கவேண்டும். தமிழக அரசு தீ விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நஷ்டஈடு வழங்கியுள்ளது. இது போதாது. அந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். இனி அனுமதியின்றி யாரையும் வனப்பகுதிக்குள் அனுமதிக்ககூடாது. சோதனைக்கு பிறகே அனுமதிக்கவேண்டும்.

முருகன்:- தீ விபத்து நடந்தவுடன் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. குறிப்பாக ஹெலிகாப்டர் வரவழைத்து பாறை இடுக்குகளில் கிடந்தவர்களை மீட்டது சரியானது. மலைஏறும் பயிற்சியை வரைமுறைப்படுத்த வேண்டும். அனுமதியின்றி பயிற்சிக்கு வழிவகை செய்யக்கூடாது. அப்படி செல்லும்போது உள்ளூர் வாசிகளை துணைக்கு அழைத்துச்செல்லலாம். வனஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com