காவிரியில் மூழ்கி தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

மகா புஷ்கர விழாவையொட்டி காவிரியில் புனித நீராடிய தாய்-மகன் உள்பட 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவிரியில் மூழ்கி தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழப்பு
Published on

கும்பகோணம்:

காவிரி மகா புஷ்கர விழா 12-ந்தேதி தொடங்கியது. இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி கும்பகோணத்தை சேர்ந்த நாகலட்சுமி (வயது 34), அவருடைய மகள் சர்மிளா (12), மகன் விமல்ராஜ் (7), நாகலட்சுமியின் சகோதரர் மனைவி கலைச்செல்வி (40), மகள் சவுமியா (12) ஆகியோர் காவிரி ஆற்றில் உள்ள செட்டிப்படித்துறைக்கு நேற்று புனித நீராட சென்றனர்.

காவிரி ஆற்றில் 5 பேரும் இறங்கி நீராடி கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளம் இருந்த பகுதிக்கு சென்ற போது 5 பேரும் நீரில் மூழ்கினர். இதனால் சர்மிளா அலறினார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். இதில் கலைச்செல்வியையும், சர்மிளாவையும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மற்ற 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். பின்னர் நாகலட்சுமி, விமல்ராஜ், சவுமியா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com