

சென்னை:
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
திகார் சிறையில் 34 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் விடுதலையாகி இருக்கும் தினகரன் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே கட்சி பணியில் இருந்து ஒதுங்கி விட்டார். அ.தி.மு.க. அணிகளுக்கு இடையேயான இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தினகரனே தடையாக இருப்பதாக ஓ.பி.எஸ். அணியினர் கருதினர்.
இதனையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்று தினகரனும் தான் ஒதுங்கி கொள்வதாக வெளிப்படையாக அறிவித்தார். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருந்த தினகரன் மீண்டும் அதிரடி அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து நேற்று மதியம் சென்னை திரும்பிய தினகரனை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அப்போது மலர் தூவி தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்துக்கு தினகரன் புறப்பட்டு சென்றார். வழி நெடுகிலும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க. அம்மா அணியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெசன்ட் நகரில் உள்ள வீட்டு முன்பும் தினகரன் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
நேற்று இரவு பெசன்ட் நகர் வீட்டில் வைத்து அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். தினகரனின் தீவிர ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 10 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் எம்.பி வேணுகோபால் உள்ளிட்ட 3 எம்.பி.க்களும் ஆதரவாக உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர் கூறும் போது, மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் சாய்வதற்கு தயாராக உள்ளனர். அ.தி.மு.க. அம்மா அணியில் பெரும்பாலான நிர்வாகிகள் தினகரனை வரவேற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
தனது அடுத்தகட்ட அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ள தினகரன் எடப்பாடி அணியினரை கடுமையாக சாடியுள்ளார்.
தன்னை ஒதுக்கி வைப்பதாக அ.தி.மு.க. அணியின் அமைச்சர்கள் சிலர் கூறிய கருத்துக்களால் தினகரன் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார். சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டதையும் அவர் விரும்பவில்லை. இது போன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தினகரன் தனது அரசியல் பயணம் பற்றி விரைவில் அதிரடி முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
இதனால் எடப்பாடி அணியில் தினகரனுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.