மாட்டிறைச்சி தடை அறிவிப்பாணையை திரும்ப பெற்றது மத்திய அரசு

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
Published on

புதுடெல்லி:

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில்  சில மாற்றங்கள் செய்து கடந்த மே மாதம் 25-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்கு வெட்டுவதற்காக சந்தைகளில் வாங்குவதோ விற்பதோ தடை செய்யப்பட்டது.  

இதன்மூலம் இறைச்சிக்காக வெட்ட மாட்டோம் என்ற உத்தரவாதம் பெற்றுக்கொண்டுதான் சந்தையில் மாடுகளை விற்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. விவசாய நோக்கத்துக்காக மட்டுமே மாடுகளை விற்க வேண்டுமென்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது. இதனால் பால் பண்ணை, தோல் உற்பத்தி, இறைச்சி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் மத்திய அரசு தலையிடுவதாக பல்வேறு விமர்சனமும் எழுந்தது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு கொண்டு வந்த தடைக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் தடை விதித்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு கொண்டு வந்த தடையைத் தளர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தில் மாற்றம் செய்யத் தயாராக இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியும் கூறியிருந்தார். இந்நிலையில், மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு இன்று திரும்ப பெற்றது. சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com