மோடியை குற்றம்சாட்டி கேரள மந்திரி மீண்டும் சர்ச்சை பேச்சு: பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு

பிரதமர் மோடியை குற்றம்சாட்டி கேரள மந்திரி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மோடியை குற்றம்சாட்டி கேரள மந்திரி மீண்டும் சர்ச்சை பேச்சு: பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு
Published on

கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மந்திரிசபையில் மின்சார துறை மந்திரியாக இருப்பவர் எம்.எம்.மணி. இவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார்.

மந்திரி எம்.எம்.மணி எந்த கருத்தையும் துணிச்சலாக தெரிவிப்பவர். இதனால் இவரது பேச்சு பல சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி கட்சிக்கும், ஆட்சிக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பெண் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினையில் சமீபத்தில் மணி பேசியதும், பிரமர் மோடி பற்றி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் கொல்லம் மாவட்ட போலீஸ் சங்க மாவட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்.எம்.மணி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

பிரதமர் மோடியின் பல நடவடிக்கைகள் நாட்டு மக்கள் நலனை பாதிப்பதாகவே உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று தேவையில்லாமல் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு ஏழை எளிய மக்களின் வயிற்றில் மோடி அடித்து விட்டார்.

இந்த நடவடிக்கை மூலம் வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் யாராவது சிக்கினார்களா? ஏழைகளை கொன்று பணக்காரர்களை மோடி வாழ வைக்கிறார்.

தற்போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்து இருப்பதன் மூலம் மீண்டும் ஏழை விவசாயிகள் வாழ்வோடு மோடி விளையாடிவிட்டார். ஏழை விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகள் வயது முதிர்ந்த பிறகு அவற்றை விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். இதற்கும் அவர் தடை விதித்துள்ளார். அவரது செயல்களை பார்க்கும்போது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் போலீஸ் டி.ஜி.பி. சென்குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடியை கேரள மந்திரி தாக்கி பேசியது எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com