மேலும் ஒரு வழக்கில் கைதாகிறார் கருணாஸ்

ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாசை 3-வது முறையாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Karunas #KarunasMLA
மேலும் ஒரு வழக்கில் கைதாகிறார் கருணாஸ்
Published on

காமெடி நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

நாடார் சமுதாயம் பற்றி தரக்குறைவாக விமர்சித்த அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் பேசினார்.

இதற்காக நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கருணாஸ் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது ஆதரவாளர்களுக்கு மது வாங்கி கொடுப்பதற்காக மட்டுமே தினமும் ரூ.1 லட்சம் வரை செலவு செய்கிறேன். தனது அமைப்பான முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கொலை செய்யவும் தயங்கக் கூடாது என்றும் கருணாஸ் பேசி இருந்தார்.

இதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். ஆனால் கோர்ட்டு அதனை ஏற்கவில்லை.

இந்த நிலையில் ஐ.பி.எல். போராட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கோர்ட்டில் போலீஸ் காவல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 2 வழக்குகளிலும் கருணாஸ் ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து கடந்த 29-ந்தேதி வேலூர் சிறையில் இருந்து அவர் விடுதலையானார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் கருணாஸ் அளித்த பேட்டியில் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பேன். ஆயிரம் முறை சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று ஆவேசமாக பேட்டி அளித்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் புளியங்குடியில் போடப்பட்ட ஒரு வழக்கில் கருணாசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி கருணாஸ் மாலை அணிவிக்க சென்றார்.

அப்போது கருணாஸ் ஆதரவாளர்களுக்கும், தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது.

இதில் கருணாஸ் மற்றும் முத்தையா தேவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 2 தரப்பினரும் அளித்த புகாரில் புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முத்தையா தேவர் காரை சேதப்படுத்தியதாக கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் இப்போது கருணாஸ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

அவரை கைது செய்வதற்காக புளியங்குடி டி.எஸ்.பி. ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

நேற்று மாலையில் புளியங்குடியில் இருந்து புறப்பட்ட போலீசார் இன்று அதிகாலையில் சென்னை வந்தனர். சாலிகிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்கு அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் படை சென்றது.

நெல்லையில் இருந்து வந்திருந்த 15-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்னை விருகம்பாக்கம் போலீசாரும் சென்றனர். மொத்தம் 50 பேர் கருணாசின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் கருணாஸ் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாசை 3-வது முறையாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com