20 நாட்கள் சட்டசபை நடந்தும் ‘மக்கள் பிரச்சினை எதற்கும் தீர்வு கிடைக்கவில்லை’: மு.க.ஸ்டாலின் பேச்சு

20 நாட்கள் சட்டசபை நடந்தும் ‘மக்கள் பிரச்சினை எதற்கும் தீர்வு கிடைக்கவில்லை’: மு.க.ஸ்டாலின் பேச்சு

20 நாட்கள் சட்டமன்ற தொடர் நடந்து இருக்கிறது. ஆனால் மக்கள் கோரிக்கைகள் எதையும் தீர்க்க அரசு முன்வரவில்லை என்று தி.மு.க செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, ஓய்வூதியம் உள்ளிட்ட மானிய கோரிக்கைகளுக்கான விவாதம் இன்று நடந்தது.

அதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்ஜெட் தாக்கல் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன. மானிய கோரிக்கைகள் மீதான சட்டமன்ற விவாதம் காலதாமதமாக நடை பெறுகிறது. 20 நாட்கள் சட்டமன்ற தொடர் நடந்து இருக்கிறது. ஆனால் மக்கள் கோரிக்கைகள் எதையும் தீர்க்க அரசு முன்வரவில்லை.

விவசாயிகள் போராட்டம், மீனவர்கள் உரிமை, ஜி.எஸ்.டி.யால் வந்த பாதிப்பு. நீட்தேர்வு விவகாரம் எதற்கும் தீர்வு கிடைக்கவில்லை. இதுதவிர நெடுவாசல் போராட்டம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அரசு ஊழியர்கள், அரசு நிர்வாகம், திட்டக்குழு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. சொந்த வீடு வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கனவு நிறைவேற முடியாத நிலை இருக்கிறது. எனவே வீடு கட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கும் முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும்.

அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவதில் விதிமுறைகளை தளர்த்த வேண்டும். தமிழ்வழி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து பல மாதங்களாகியும் இன்னும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டமும் நடை பெறுகிறது. எந்த பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

அமைச்சர் ஜெயக்குமார்:- 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல் படுத்துவது குறித்து கருத்துக்கள் அறியப்பட்டுள்ளன. சம்பளம் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. படிகள் பற்றிய மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் வழி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் தங்கமணி ஆகியோரும் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com