

சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சித்தலைவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-
காவிரி மீட்புக்குழு பயணம் இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்தும், 9-ந்தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்தும் தொடங்குகிறது. இந்த பயணத்தை திருச்சி முக்கொம்பில் மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்துகிறார்.
இந்த இரு குழுவிலும் எல்லாத் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இதனை நான் தொடங்கி வைக்கிறேன். கடலூரில் 13-ந்தேதி காலை அந்த பயணம் முடிவடைகிறது. எல்லா தலைவர்களும் அங்கே கூடி ஒன்றாக நிறைவு செய்ய இருக்கிறோம். அன்றே உடனடியாக கவர்னரை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறார்கள். அவர் ஒதுக்கும் நேரத்தில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
அனைத்து கட்சி கூட்டத்தில் 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றோம். இந்த 9 கட்சிகளி சார்பிலும், மற்ற கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் அவர்களின் ஆதரவையும் சேர்த்து 2 குழுவாக பிரித்து நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இதில் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
காவிரி உரிமை மீட்பு பயணத்தில் 9 கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கிறோம். அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி வழியாக கடலூர் சென்றடைகிறோம்.
13-ந்தேதி அனைத்து கட்சித் தலைவர்களும் கடலூரில் கூடி அங்கு நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறோம். பின்னர் அன்று பிற்பகலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை எல்லா கட்சித் தலைவர்களும் சந்திக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue