டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிப்பு இல்லையா?: அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ஸ்டாலின் கண்டனம்

டெல்டாவில் வடகிழக்கு பருவ மழையினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அபாண்டமாக பொய் கூறியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குலமாணிக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.
குலமாணிக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.
Published on

மன்னார்குடி:

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அதனை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு நேற்று வந்தார். அவர் மன்னார்குடியை அடுத்த ராமநாதபுரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் மழை வெள்ளத்தில் மூழ்கிய வயல்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறை கேட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். முன்னதாக மன்னார்குடிக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், ஆடலரசன் எம்.எல்.ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோட்டூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர், கீழபூழுதிக்காடு, மேலபுழுதிக்காடு விக்கிரம பாண்டி, 57 குலமாணிக்கம், குருவாடி, சின்னகுத்தூர் ஆகிய இடங்களுக்கு மு.க.ஸ்டாலின் காரில் சென்று மழை சேதங்களை பார்வையிட்டார்.

பின்னர் நாகை மாவட்டம் தச்சனம், திருக்குவளை, தலைஞாயிறு ஒன்றியம் பழையாற்றங்கரை பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அந்த பகுதி மக்கள் படகுகள் மூலம் மு.க.ஸ்டாலின் இருக்கும் இடத்துக்கு வந்து குறைகளை தெரிவித்தனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிமராமத்து பணியில் தூர்வாரி இருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. குடிமராமத்து பணிக்காக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 49 கோடி எங்கே போனது? டெல்டாவில் வடகிழக்கு பருவ மழையினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அபாண்டமாக பொய் கூறியுள்ளார்.

நான் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வெள்ள பாதிப்பிற்காக மத்திய அரசிடம் ரூ.1500 கோடி நிவாரணம் கேட்கப்பட்டது. ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக வழங்கப்பட்ட ரூ.400 கோடி எங்கே போனது? என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com