நீட் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற கால தாமதம் செய்யக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற கால தாமதம் செய்யக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற கால தாமதம் செய்யக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் சட்டமன்றத்தில் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டாலும் இன்று வரை அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துக் கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை அமைத்து, மாநில உரிமைகளை அடியோடு பறித்துக்கொள்ள வியூகம் வகுத்து, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.

அ.தி.மு.க. அரசு, நீட் தேர்விலிருந்து முற்றிலும் விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா பற்றி மத்திய பா.ஜ.க. அரசிடம் எந்தவொரு கேள்வியும் எழுப்பத் தயாராக இல்லை. நீட் தேர்வு நடைபெறப் போகின்ற நிலையில் கூட, அந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெற முதல்- அமைச்சரோ, அ.தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோ துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

எதிர்கால தலைமுறையினரின் மருத்துவக்கல்வி விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் இதுபோன்ற கபட நாடகம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு, மே மாதம் 6-ம் தேதி நடைபெறவிருப்பதால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனியும் காலதாமதம் செய்யாமல் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், கருணாநிதி நிறைவேற்றிய நுழைவுத்தேர்வு ஒழிப்புச் சட்டத்தின் தனிச்சிறப்பான தன்மையினை முறையாக முன்னெடுத்துச் சென்று நிலைநாட்டி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியைக் காப்பாற்ற அ.தி.மு.க. அரசு தவறிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com