

ஜெயலலிதா காலமானதால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. குறுகிய காலமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லாமுத்துசோழன், இடைத் தேர்தலின்போது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மருதுகணேஷ் ஆகியோரும் அண்ணா அறிவாலயம் வந்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பினை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் மேலும் கூறுகையில், “ஜனநாயக முறைப்படி இந்த இடைத் தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும். பிற கட்சிகளிடமும் ஆதரவு கேட்கப்படும்” என்றார்.