அமைச்சர்கள் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே வருகிற 24-ல் மீண்டும் பேச்சுவார்த்தை

அமைச்சர்கள் - தொழிற்சங்கங்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வருகிற 24-ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
அமைச்சர்கள் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே வருகிற 24-ல் மீண்டும் பேச்சுவார்த்தை
Published on

தமிழகம் முழுவதும் நேற்று முதல் 2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. தொழிற்சங்க ஊழியர்கள் - அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு, ஓய்வுக்கான பென்ஷன், நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் வேலைக்கு, ஊருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரச சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் உறுதி அளித்ததாக தொழிற்சங்க முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதாவது, முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தர அரசு ஒப்புதல் அளித்தது. இரண்டாம் கட்டமாக 250 கோடி ரூபாயும், அடுத்து படிப்படியாக மீதமுள்ள நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 3 மாதத்திற்கு பிறகு தொழிலாளர்களின் பிடிப்புத் தொகை கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக சண்முகம் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை வருகிற 24-ஆம் தேதி மீண்டும் நடைபெற உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com