மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணம் இறுதி பயணமாக அமையும்: திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு

ஸ்டாலினின் எழுச்சி பயணம் இறுதி பயணமாகத்தான் அமையும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளர்.
மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணம் இறுதி பயணமாக அமையும்: திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் சினிமாவில் இருந்து முதல்-அமைச்சரானது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான். வேறு யாரும் இந்த பதவிக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்.

அடுத்த மாதம் 2 ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. அதில் தண்டனை வழங்கியதும் ஊழல் கட்சி எது என்று தெரிந்து விடும். மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை என கூறி வழக்கு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெற்றது தி.மு.க.தான். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால் டெங்கு பரவாமல் தடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட்டு முதல்-அமைச்சராகி விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 32 ஆண்டுகளாக இருந்த சசிகலாவும் அவரது உறவினர்களும் ஆட்சியை உதாசீனப்படுத்தி வருகின்றனர்.

தி.மு.க. செய்த தவறால் கெயில் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஸ்டாலின் கொண்டு வந்த இந்த திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. தற்போது எழுச்சி பயணம் செல்லப் போவதாக கூறுகிறார். அது அவர்களுக்கு இறுதி பயணமாகவே அமையும். ஜெயலலிதா அமைத்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com