இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமர் மோடி ஆதரவு உள்ளதால் இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

பெரியகுளத்தில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆதரவாக உள்ளார். 98 சதவீத கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலம் எங்களிடம் உள்ளது. எனவே எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அந்த சின்னத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து வெற்றி பெறுவோம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியபடி தமிழகத்தில் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியை நடத்துவர்.

ஜெயலலிதா இருந்த போது, அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்க்க செல்லும் போது, அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை கேட்டு விட்டு செல்லுங்கள் என்பார்.

அந்த அளவுக்கு அவர் மீது ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார். அ.தி.மு.க. 46 வயது இளைஞர், தி.மு.க. 70 வயது முதியவர். எங்களுடன் தி.முக. மோதினால் தவிடு பொடியாகி விடும். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் யோகம் கிடையாது.


ஏன் அவரது கட்சிக்கு தலைவராக முடியாமல் திணறுகிறார். நமக்கு நாமே திட்டம் டீக்கடை, வடைக்கடையில் கூட்டம் சேரும். கடைக்காரருக்கு பணம் சேருமா? என்பது சந்தேகம்.

ஸ்டாலின் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை மீறி ஓட்டெடுப்பு நடத்தினால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது. வழிகாட்டுதல் திறனும் இல்லை. டுவிட்டர் மூலம் பேசினால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது.

X

Maalai Malar
www.maalaimalar.com