கமல் - ரஜினி சந்திப்பால் எதுவும் நடக்காது என அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

ரஜினி - கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை என்று அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியுள்ளார். #Rajinikanth #Kamalhaasan #Jayakumar
கமல் - ரஜினி சந்திப்பால் எதுவும் நடக்காது என அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
Published on

சென்னை:

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயகுமார், க.பாண்டிய ராஜன், காமராஜ் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் டி.ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழர்களின் சடலங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரஜினி-கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. எந்த மாற்றமும் ஏற்படாது. ரூஸ்வெல்ட், வின்சென்ட் சர்ச்சில் சந்திப்பை போன்று இதை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.

மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது என்பது விட்டலாச்சாரியார் படத்தில் வருவது போன்று மாயவித்தையை காட்டி ஆட்சியை கைப்பற்ற எண்ணும் ஒரு மாய உலகத்தில் இருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் ‘மேண்டேட்டரி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலினுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் சட்ட வல்லுனர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதைவிடுத்து அனைத்து கட்சி கூட்டம் என்பது தேவையற்ற ஒன்று.

தமிழகத்திற்கு மறுக்கப்பட்டு 14.75 டி.எம்.சி. தண்ணீர் பெறுவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்- அமைச்சர் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். இந்த தீர்ப்பின் மூலம் காவிரி ஆறு எங்களுக்குதான் சொந்தம் என்று இனி கர்நாடகா உரிமை கோர முடியாது. இது அவர்களுக்கு சம்மட்டி அடியாகும்.

காவிரி நீரை தேக்கி வைப்பதற்கும் குடிமராமத்து பணிகள் செய்யப்படும். மழைநீர் சேகரிப்பு திட்டம் ஒரு முன்னோட்ட திட்டமாகும். அதன்மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். மழைக் காலத்தில் தண்ணீரை தேக்கிவைக்க தடுப்பணை தேவைப்பட்டால் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Kamalhaasan #Jayakumar #MinisterJayakumar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com