மத்திய மந்திரி சென்ற விமானம் தாமதம்: 3 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது ஏர் இந்தியா

மத்திய மந்திரி சென்ற விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மந்திரி சென்ற விமானம் தாமதம்: 3 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது ஏர் இந்தியா
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனம் ஏர் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயணிகள் விமானம் நேற்று காலை டெல்லியில் இருந்து விஜயவாடாவுக்கு புறப்பட தயாராக இருந்தது. விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு உள்ளிட்ட சுமார் 125 பயணிகள் வழக்கமான சோதனை முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்தனர். ஆனால், விமானத்தை இயக்கும் விமானி வராததால் குறித்த நேரத்தில் விமானம் புறப்படவில்லை. 

நீண்ட நேரம் காத்திருந்து அதிருப்தி அடைந்த பயணிகள் விமான நிறுவனத்தை குற்றம்சாட்டினர். மத்திய மந்திரி அசோக் கஜபதி ராஜுவை சூழ்ந்துகொண்ட சிலர், இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இதையடுத்து அவர் விமானத்தில் இருந்தபடியே ஏர் இந்தியாவின் புதிய தலைவரான பிரதீப் கரோலாவை செல்போன் மூலம்  தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். அதன்பின்னர் பைலட் வந்ததும் விமானம் புறப்பட்டுச் சென்றது.

மத்திய மந்திரியின் உத்தரவையடுத்து இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்ட சேர்மன் கரோலா, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தாமதமாக வந்த பைலட்டுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். 

வானிலை சீராக இல்லாததால் சற்று நேரம் காத்திருந்து புறப்பட முடிவு செய்ததாகவும், இந்த தகவலை ஊழியர்களுக்கு முறையாக தெரிவிக்காததால், அவர்கள் பயணிகளை விமானத்தில்  ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்தில் அமர வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com