

தஞ்சாவூர்:
டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் தஞ்சை திலகர் திடலில் இருந்து கொடி மரத்து மூலை வரை பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி ஆணையர் வரதராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன், பகுதிசெயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணிய மூர்த்தி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் தலைமையில் டெங்கு குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் டெங்கு ஒழிப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் கூட்டி டெங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் அடிப்படையிலேயே தஞ்சையில் இன்று டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து டெங்குவை ஒழிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் இறந்தவர்கள் குறித்து முறையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கடைமடை வரை சென்று விட்டது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு விட்டன. காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி ஓரிரு நாட்களில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.