எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: டி.டி.வி.தினகரன் தலைமையில் 23-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருவதாக எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: டி.டி.வி.தினகரன் தலைமையில் 23-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை கூடுதலாக நியமித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தவும் திட்டமிட்டு பொதுக் கூட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார்.

முதல் பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம் மேலூரில் 14-ந்தேதி நடக்கிறது. அதில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 2-வது பொதுக்கூட்டம் வடசென்னை வடக்கு மாவட்டத்தில் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார்.

வடசென்னை மாவட்டத்தில் எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது-

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஆர்.கே.நகர் அல்லது கொளத்தூர் ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை டி.டி.வி.தினகரன் வழங்குகிறார். சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்க கூடிய வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பொதுக்கூட்டம் அ.தி.மு.க.வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தலைமை கழகத்திற்கு 17-ந்தேதிக்கு பிறகு செல்வார்கள். அ.தி.மு.க. என்னும் குடும்பத்தில் பிறந்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதற்காக கூடுதலாக பொறுப்புகளை டி.டி.வி.தினகரன் வழங்கி இருக்கிறார். யாரிடமும் இருந்து பொறுப்பை பறிக்க வில்லை. அவர்கள் தலையில் மண்ணை போட்டு கொள்ள விரும்பினால் எதுவும் பேசட்டும்.

இந்த கட்சி அம்மாவின் கட்டுப்பாட்டில் எப்படி இருந்ததோ அது போல கட்டுகோப்புடன் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான நடவடிக்கைகளை டி.டி.வி. தினகரன் தொடர்ந்து எடுத்து வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com