

சேலம்:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேலம் மாவட்டத்தில் முதல் ஆளாக மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை இணைந்தார்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதி தவிர மற்ற 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
இதில் செம்மலையை தவிர மற்ற 9 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி - ஓ.பி.எஸ்.அணிகள் இணைந்த போது செம்மலைக்கு அமைச்சர் பதவி அல்லது வழிகாட்டு குழுவில் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு பதவி கிடைக்காததால் ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தார். அப்போது அவர் செம்மலையை அழைத்து பேசி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை. செம்மலை எம்.எல்.ஏ.வும் முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை. மேலும் செம்மலை தினகரன் அணிக்கு தாவலாம் என்ற தகவலும் நேற்று பரவியது. இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து செம்மலை எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, அவர் கூறுகையில், எப்போதும் நான் தலைமைக்கு கட்டுப்படுவேன். இன்று சென்னையில் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்னை சென்றுள்ளேன். நான் எப்போதும் தினகரன் அணிக்கு செல்ல மாட்டேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்துடனேயே இருப்பேன். சிலர் வேண்டும் என்றே வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.