

சென்னை:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கும் நிலையில் மாநில பாடத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசானையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது.
மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசும் சாதகமான பதில் எதையும் கூறவில்லை.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதிப் பட்டியலை தயார் செய்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியலில் தயார் செய்யுமாறு மருத்துவ கல்வி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இன்று மாலைக்குள் தகுதிப் பட்டியலை தயார் செய்ய சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நீட் மதிப்பெண் குறித்த விவரங்கள் எங்களிடம் தயாராக உள்ளன.
எனவே தகுதிப் பட்டியலை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு நாளை (14-ந்தேதி) வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகுதிப் பட்டியல் நாளை வெளியாகும் நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி. எஸ். மருத்துவப் படிப்பு களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிகிறது.