

புதுடெல்லி:
டெல்லி மேல்-சபையில் நேற்று காலை பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி தலித்துகள் பிரச்சினை குறித்து பேசினார். அவருக்கு 3 நிமிடத்துக்கு மேல் நீண்ட நேரம் பேச துணைத் தலைவர் பி.ஜே. சூரியன் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த மாயாவதி துணைத் தலைவர் குரியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு சபையில் இருந்த வெளியேறினார்.
பின்னர் அவர் மேல்சபை தலைவர் அமீத் அன்சாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
மாயாவதியின் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி முக்தார் அப்பார் நக்வி கண்டனம் தெரிவித்தார். அவைத் தலைவரையே மிரட்டிய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே மாயாவதி தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கடிதத்தில் ராஜினாமா தொடர்பான வாசகத்தை தவிர வேறு எதுவும் குறிப்பிடக்கூடாது, அப்படி குறிப்பிட்டால் தொழில்நுட்ப காரணங்களை காட்டி அந்த ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்படும்.
மாயாவதியும் ராஜினாமா கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் அவரது ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்படும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.