

புதுடெல்லி:
பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக இருந்த பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தரபிரதேசத்தில் தலித் இன மக்கள் தாக்கப்பட்டது குறித்து பேசுவதற்கு போதுமான கால அவகாசம் தரவில்லை என்று கூறி அவர் தனது எம்.பி. பதவியில் இருந்து விலகி உள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாயாவதி மீண்டும் எம்.பி. ஆகும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தற்போது புல்யூர் பாராளுமன்ற மக்களவை தொகுதி இடம் காலியாக உள்ளது.
அந்த தொகுதி எம்.பி. ஆக இருந்த கேசவ பிரசாத் மவுர்யா துணை முதல்-மந்திரியாக தேர்வானதால், அந்த தொகுதி காலியாக உள்ளது. விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அந்த தேர்தலில் மாயாவதி போட்டியிட்டு எம்.பி. ஆக முடிவு செய்துள்ளார்.
மாயாவதி களத்தில் இறங்கும்பட்சத்தில் எதிர்க்கட்சிகளிடையே புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என்று தெரிகிறது. அதாவது மாயாவதியை முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலை உருவாகும்பட்சத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி உருவாகும். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு அது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டே மாயாவதி தனது மேல்சபை எம்.பி. பதவியை திட்டமிட்டு ராஜினாமா செய்து இருப்பதாக கூறப்படுகிறது.