இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றார்

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றனர். #YouthOlympics2018 #ManuBhaker
இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றார்
Published on

206 நாடுகள் பங்கேற்றுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 62 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா மொத்தம் 274 கிலோ (ஸ்னாட்ச்-124, கிளன் அண்ட் ஜெர்க்-150 கிலோ) எடை தூக்கி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். துருக்கி வீரர் தோப்தாஸ் கானெர் மொத்தம் 263 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், கொலம்பியா வீரர் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் மொத்தம் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். மிசோரமை சேர்ந்த 15 வயதான ஜெர்மி லால்ரினுங்கா உலக இளையோர் மற்றும் ஆசிய இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லால்ரினுங்கா கூறுகையில், ‘இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை குத்துச்சண்டையில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர். அதனால் நானும் குத்துச்சண்டை வீரராக ஆக வேண்டும் என்று விரும்பி, ஆரம்ப காலத்தில் அதற்குரிய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். அந்த சமயத்தில் தான் எங்களது கிராமத்தில் புதிதாக பளுதூக்குதல் அகாடமி திறக்கப்பட்டது. அதை பார்த்ததும் எனக்குள் பளுதூக்குதல் வீரராக உருவெடுக்க வேண்டும் என்று ஆசை துளிர்விட்டது. அதன் பிறகு பளுதூக்குதலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த போட்டிக்கு உடல்ரீதியாக நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் தான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த மே மாதம் அம்மை நோயால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து குணமடைந்ததும், பழைய நிலையை எட்ட கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இனி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இன்னும் தீவிரமாக தயாராகுவேன். ஒலிம்பிக் போட்டிக்கு எனது உடல் எடைப்பிரிவை 67 கிலோவுக்கு மாற்றப்போகிறேன்’ என்றார்.

இதன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் 236.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ரஷிய வீராங்கனை இயானா எனினா 235.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜார்ஜியா வீராங்கனை நினோ குட்சிபெரிட்ஸ் (214.6 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

அரியானாவை சேர்ந்த 16 வயதான மானு பாகெர் உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவர் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தார். அதற்கு இந்த போட்டியில் மானு பாகெர் பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மானு பாகெர் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆசிய போட்டி ஏமாற்றத்திற்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி எனது மனஉறுதிக்கு வலுசேர்க்கும். ஒவ்வொரு முறையும் முழுதிறமையை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறேன். சில நேரம் வெற்றிகரமாக அமையாமல் போகலாம். ஆனால் விடா முயற்சியை சிறந்த முறையில் தொடர்வதும், அதிக புள்ளிகள் குவிப்பதும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com