ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தர்மபுரியில் அந்த கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
Published on

தர்மபுரி மாவட்ட சமூகநல்லிணக்க மேடை சார்பில் ‘இந்தியாவின் பன்மைத்துவத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு தர்மபுரியில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நந்தன், சர்க்கரையாஸ், குமார், தேவராஜன், சாதிக்பாஷா, ராஜசேகரன், செந்தில்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பெருமாள் வரவேற்று பேசினார்.

இந்த கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பன்மைத்துவத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். இதில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் சக்தி நன்றி கூறினார்.

கூட்டத்தின் முடிவில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத நல்லிணக்கம் பற்றி கருத்து தெரிவித்தாலோ, பேசினாலோ அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நாட்டில் கருத்து சுதந்திரமும், சகிப்புதன்மையும் கேள்விக்குறியாகி வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான செயல்பாட்டின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். அந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருடைய வெற்றிக்கு மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருந்து பாடுபடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com