

பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணியின் பெட்டியில் போலி செல்போன் குண்டு கண்டெடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இன்று இரவு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் செல்லும் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் பரிசோதித்த போது, ஒரு பயணியின் பெட்டியில் சந்தேகப்படும் வகையிலான பொருள் இருந்துள்ளது.
இதனால், விமானம் புறப்படுவது தாமதமானது. அந்த பெட்டியை தனியே எடுத்து பரிசோதித்து பார்த்த போது செல்போன் வெடிகுண்டு போன்ற அமைப்புடன் பொருள் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, அதனை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக பரிசோதித்து பார்த்தனர்.
ஆனால், அது போலியான குண்டு என பின்னர் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெட்டியின் உரிமையாளரை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் பலத்த பரபரப்பு நிலவியது.