மணப்பாறை அருகே மர்ம பொருள் வெடித்து ஒருவர் உடல் சிதறி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று காலை மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிந்தார். மேலும் படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
மணப்பாறை அருகே மர்ம பொருள் வெடித்து ஒருவர் உடல் சிதறி பலி
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் கடைசி பகுதியாக திகழ்வது மேட்டு ஆளிப்பட்டி. இங்கு பொத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த அருளானந்து (வயது 45) என்பவர் பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

அதே பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், இரும்பு பட்டறைகள், வல்கனைசிங் கடைகள், பேட்டரி சர்வீஸ் நிலையங்கள் உள்ளன. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியை கடந்து தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சென்று வருகிறார்கள்.

இந்தநிலையில் இன்று காலை அருளானந்துக்கு சொந்தமான பழைய இரும்புக்கடையில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்த சத்தம் சுற்றியுள்ள சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது.

அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் பதறியடித்துக் கொண்டு தங்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அப்போது பழைய இரும்புக்கடை முன்பு 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் சிதறிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்சுகள் விரைந்து வந்தன. இதில் ஒருவர் மட்டும் இறந்து கிடந்தார். அவரது உடல் பாகங்கள் வெடி விபத்தில் சிதறிய நிலையில் ஆங்காங்கே கிடந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மணப்பாறை போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். அப்போது விபத்தில் இறந்தது இரும்புக்கடையில் வேலை பார்த்த பொத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (50) என்று தெரியவந்தது.

மேலும் காயம் அடைந்த நல்லாம்பிள்ளையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நடத்தி வரும் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வரும் பாலசுப்பிரமணியன் (17), இரும்புக்கடை நடத்தி வரும் அருளானந்து, பொத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த கனகராஜ் (65) ஆகியோர் என்றும் தெரிந்தது. அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி மற்றும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியையொட்டி வீரமலைப்பாளையம் பகுதி அமைந்துள்ளது. இதன் மலையடிவார பகுதியில் அவ்வப்போது இந்திய- திபெத் ராணுவ படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அவ்வாறு நடத்தப்படும் பயிற்சியின்போது அவர்கள் விட்டுச்செல்லும் வெடி பொருட்கள், தோட்டாக்கள் போன்ற அமைப்புகளை பொது மக்கள் சேகரித்து வந்து இரும்புக்கடைகளில் வழங்கி பணம் பெறுவது வழக்கம்.

அவ்வாறு எடுக்கப்பட்ட பொருட்களில் வெடிக்காமல் இருந்த ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருளை உடைக்கும்போது அதில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதே போல் வீரப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு சிலர் இறந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

வெடி விபத்து ஏற்பட்ட பகுதியை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பார்வையிட்டார். இந்த விபத்து காரணமாக அங்குள்ள சில வீடுகளில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. மணப்பாறை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com