மணலியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

மணலியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சாலை தீ விபத்து (கோப்பு படம்)
தொழிற்சாலை தீ விபத்து (கோப்பு படம்)
Published on

திருவொற்றியூர்:

மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான சி.பி.சி.எல். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு 1,500 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நாப்தாவாக பிரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நாப்தா செல்லக்கூடிய குழாய் வால்வில் திடீரென்று கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதையடுத்து தொழிற்சாலையில் உள்ள அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.

இதைக் கேட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். பின்னர் நிறுவனத்தின் உள்ளே இருந்த தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர் பகுதியில் இருந்து ஏழு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றிய இடத்தில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து அபாய சங்கு ஒலித்ததால் நிறுவனத்தின் அருகே வசிக்கக்கூடிய மக்கள் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு விட்டதோ என்று பீதி அடைந்தனர்.

பின்னர் போலீசார் பெரும் அளவில் விபத்து ஏதும் இல்லை என்று பொது மக்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com