

பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி (89).
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 2008-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கி கொண்ட வேளையில் மக்களவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.
இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் வசித்து வந்தார். கடந்த இருமாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
மேலும், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சோம்நாத் சாட்டர்ஜி வாழ்ந்த காலத்தில் தனது உடலை கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் முழு அரசு மரியாதைக்கு பின் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும். பின்னர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜா பசந்தா ராய் சாலையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் குடும்பத்தினர், உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
வீட்டில் இருந்து இறுதி ஊர்வலமாக சென்று கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனையில் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். #SomnathChatterjee #SomnathChatterjeebody #Mamata