

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிய மம்தா, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். எனினும், தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வரும் சூழ்நிலையில், பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க இயலாது.
மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால் 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜகவினர் கூறுவதாக ஊடகங்களில் செய்தியை பார்த்தேன். அவர்கள் கூறுவதில் உண்மையில்லை. 54 பேரும் அரசியல் ரீதியாக கொல்லப்படவில்லை; தனிப்பட்ட பிரச்சினையால் கொல்லப்பட்டனர். பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திறக்காக எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது.” என கூறியுள்ளார்.
இதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார். இத்தகவலை கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.