

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகமானதால் மணலுக்கு மாற்றாக எம்.சான்ட் (ஜல்லிக்கற்களின் துகள்) தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால் பொதுமக்கள் மத்தியில் எம்.சாண்ட் மணலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி மலேசியாவில் இருந்து 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஐ.ஆர்.வி.எஸ். என்ற நிறுவனம் 56,750 டன் மணலை கப்பலில் ஏற்றிக்கொண்டு எண்ணூர் துறைமுகத்துக்கு கடந்த 23-ந்தேதி வந்தது. இந்த மணல் முழுவதும் இறக்கப்பட்டு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு யூனிட் (100 கனஅடி) மணல் விலை ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர லாரி வாடகை கொடுக்கப்பட வேண்டும்.
வெளிப்படைத் தன்மையுடன் மணல் விற்பனை நடைபெற ஆன்லைனில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் இன்று மாலை முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறுகையில் “எண்ணூரில் மணல் விற்பனை நடைபெறுவது சென்னையில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் சென்னை மற்றும் புறநகரில் மணல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மலேசியா மணல் இறக்குமதியால் மணல் தேவை ஓரளவு பூர்த்தியாகும்.
விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு யூனிட் மணல் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.