மோடியை சந்திக்க உறவினரை அழைத்து செல்வதா?: எடப்பாடி பழனிசாமிக்கு மைத்ரேயன் கேள்வி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க, நிர்வாகத்துக்கு தொடர்பில்லாத தனது உறவினரை அழைத்து செல்வதா? என ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியை சந்திக்க உறவினரை அழைத்து செல்வதா?: எடப்பாடி பழனிசாமிக்கு மைத்ரேயன் கேள்வி
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் மோடியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் மோடியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி கூறும் போது, சட்டசபையில் ஜெயலலிதா பட திறப்பு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு மற்றும் தமிழக பிரச்சினைகள் தொடர்பாக பேசியதாக கூறினார்.

ஓ. பன்னீர்செல்வம் மோடியை சந்தித்த போது மைத்ரேயன் எம்.பி, கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மோடியுடன் தனியாக பேசி இருக்கிறார். வழக்கமாக முதல்வர்- பிரதமர் சந்திப்பின் போது உயர் அதிகாரிகள் உடன் இருப்பார்கள். மொழி பெயர்ப்புக்கும் அவர்களே உதவுவார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகத்துக்கு தொடர்பு இல்லாத தனது உறவினர் மாணிக்கம் என்பவரை மொழிபெயர்ப்பு உதவிக்கு அழைத்து சென்றுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி மோடியை தனியாக சந்தித்தது பற்றி பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. கூறியதாவது:-

கடந்த 3 மாதங்களாக தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கவில்லை. சசிகலாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது. பிரதமரை சந்திக்க சென்ற முதல்வர் தனது உறவினரை மட்டும் உடன் வைத்துக்கொண்டு பேசி இருக்கிறார். அவருடன் இருந்தவர்கள் யார் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் கமி‌ஷன் ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பிறகு எங்கள் அணி நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.

இரு அணிகள் இணைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு ஆகிய பிரச்சினைகள் பற்றியே விவாதித்து இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com