

போரூர்:
மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுங்கசாவடி உள்ளது. இங்குள்ள 5 கவுண்டர்களில் வாகனங்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இதில் ஏராளமான வட மாநில ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை 2.30மணி அளவில் வண்டலூரில் இருந்து மாதவரம் நோக்கி டாரஸ் லாரி வந்து கொண்டிருந்தது. மதுரவாயல் டோல்கேட்டில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி வரி வசூலிக்கும் கவுண்ட்டர் மீது பாய்ந்தது.
இதில் அங்கு பணம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் தாக்கோடா (வயது24) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
மேலும் பணியில் இருந்த ஊழியர்கள் மணி (53) சந்திர்ஷெட்டி(32) நில்மதுஷா (18) ஆகிய 3பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
லாரி மோதியதில் வரி வசூலிக்கும் கவுண்டர் பலத்த சேதம் அடைந்தது. தூக்க கலக்கத்தில் டிரைவர் லாரியை வேகமாக இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேலை கைது செய்தார். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews