தொலை தூர தேர்வில் முறைகேடு- சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 800 பேர் மீது நடவடிக்கை

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 800 பேர் தொலைதூர தேர்வில் முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொலை தூர தேர்வில் முறைகேடு- சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 800 பேர் மீது நடவடிக்கை
Published on

சென்னை:

சென்னை பல்கலைக் கழகத்தில் பல்வேறு பட்ட படிப்புகள், உயர் படிப்புகள் தொலை தூரக் கல்வி மூலம் படிப்பதற்கான வசதிகள் உள்ளன.

கல்லூரிகளுக்கு நேரிடையாக சென்று படிக்க முடியாதவர்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பவர்கள் தொலைதூரக் கல்வி மூலம் படிப்பினை தொடருவார்கள். வீட்டில் இருந்தபடியோ, பணியில் இருந்து கொண்டே படிக்கக் கூடிய இந்த முறையில் சென்னையில் பல்கலைக் கழகம் தமிழகத்தில் மட்டுமில்லாது பிற மாநிலங்களிலும் மையங்களை அமைத்துள்ளது.

மைசூரு, ஐதராபாத், மும்பையில் அதனுடைய படிப்பு மையங்கள் செயல்பட்டன. அந்த மையங்கள் மூலமாக நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவர்கள் முறைகேடு செய்து தேர்வு எழுதியதாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. சிண்டிகேட் சப்-கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரகசியமாக விடைத்தாள்களை ஆய்வு செய்தனர்.

அப்போது 800 மாணவர்களின் விடைத்தாள்களில் மோசடி நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விடைத்தாள்களில் வெவ்வேறு விதமான கையெழுத்து இடம் பெற்று இருந்தது, தேர்வு கண்காணிப்பாளரின் கையொப்பம் மாறுபட்டும் விடைகள் அழகாக, தெளிவான கையெழுத்ததால் எழுதப்பட்டு இருந்தது.

மேலும் விடைத்தாளை வெளியில் கொண்டு சென்று எழுதி இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.

2016-ம் ஆண்டு நடந்த இந்த தேர்வு முறைகேடு குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

800 மாணவர்கள் முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்க சிண்டிகேட் குழு முடிவு செய்தது. தமிழகத்தில் மட்டுமின்றி வேறு எங்கும் அவர்கள் தேர்வு எழுத முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுஅறிந்து துணைவேந்தர் பி.துரைசாமி கூறுகையில், 800 மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் தேர்வு எழுதவோ, பல்கலைக்கழகங்களில் சேரவோ முடியாது என்றார்.

அதே நேரத்தில் 50 மாணவர்கள் முறையாக தேர்வு எழுதி இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு முடிவு வெளியிடப்படும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டது பிற மாநில மாணவர்கள் அல்ல. அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்கலைக்கழக தொலைத் தூரக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஒருசில விடைத்தாள்களும் திருட்டு போய் உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த முறைகேட்டை தொடர்ந்து வெளி மாநிலங்களிங்களில் செயல்பட்டு வந்த கல்வி மையங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் மட்டுமே சென்னை பல்கலைக்கழக மையங்கள் செயல்படுகின்றன. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com