உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு
புதுடெல்லி:
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகளை மறுவரையறை செய்தும், சுழற்சி முறை இடஒதுக்கீட்டு முறையிலும் நடத்த வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
மேலும், தேர்தல் பணிகளை மாநில அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் மத்திய அரசு ஊழியர்களை கொண்டு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்ற போது மனுதாரர் தரப்பில், இந்த பிரச்சினை தொடர்பான மூல மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் மனுவை திரும்ப பெற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்குவோம் என்று கூறியதோடு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஆனால் அன்று வழக்கு விசாரணைக்கு வராத நிலையில், இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 18-ந் தேதிக்குள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நவம்பர் 17-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 4-ந் தேதி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு வக்கீல் எம்.பி.பார்த்திபன் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் 18-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு மீதான தீர்ப்பின் அடிப்படையில் அமையும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து வகையிலும் தயாராக உள்ளது. எனவே, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவெடுக்கும் வகையில், நிலுவையில் உள்ள வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விரைவில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

