தலைமை நீதிபதி இடமாறுதலுக்கு எதிர்ப்பு- ஐகோர்ட்டில் வக்கீல்கள் போராட்டம்

தலைமை நீதிபதி தஹில் ரமணியின் இடமாறுதலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமணி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்தது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி விடுத்த கோரிக்கையையும், மூத்த நீதிபதிகள் குழு நிராகரித்தது.

இதையடுத்து பதவியை வி.கே.தஹில் ரமணி ராஜினாமா செய்தார். இந்த தகவலை விருந்து நிகழ்ச்சியில் சக நீதிபதிகளிடம் அவர் கூறினார். ஐகோர்ட்டு நீதிபதிகள், முடிவை பரிசீலிக்க கோரியும் அவர் ஏற்கவில்லை. தற்போது திங்கட்கிழமை முதல் அவர் ஐகோர்ட்டுக்கு வரவில்லை. வழக்குகளையும் விசாரிக்கவில்லை.

தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை பணியிட மாற்றிய முடிவை திரும்ப பெறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட்டில், இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும்பாலான வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.

இதனால், பல வழக்குகளின் விசாரணை வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டது.

ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் வழக்கமான கூட்டம் இல்லை. மிக குறைந்த எண்ணிக்கையில் வக்கீல்களும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

இதற்கிடையில் ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்கத்தின் துணை தலைவர் சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் நளினி உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்த முடிவை உடனே வாபஸ் பெறவேண்டும் என்றும் நீதிபதிக்கே நீதி இல்லையா? என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து வக்கீல் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கூறியதாவது:-

தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாறுதல் செய்தது மிகவும் வருத்தமாக உள்ளது. சென்னை ஐகோர்ட்டு என்பது பாரம்பரியமான ஐகோர்ட்டாகும்.

75 நீதிபதி பணியிடங்களுடன், லட்சக்கணக்கான வழக்குகள் தாக்கலாகும் இந்த ஐகோர்ட்டில் இருந்து, தலைமை நீதிபதியுடன் சேர்த்து 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாறுதல் செய்வது வருத்தமாகத்தான் உள்ளது. எனவே இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் நளினி கூறியதாவது:-

நீதிபதிகள் இடமாறுதல் நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தலைமை நீதிபதி தஹில் ரமணியின் இடமாறுதல் காரணம் தெளிவாக இல்லை.

சிறந்த நிர்வாகத்துக்காக என்று காரணம் கூறினால், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹில் ரமணி ஏராளமான நிர்வாக சீர்திருத்தங்களை செய்துள்ளார்.

எனவே சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் குழு ஒன்று விரைவில் டெல்லி சென்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளை சந்தித்து முறையிட உள்ளோம்.

அதேநேரம், சுயமரியாதைக்காக தன் நீதிபதி பதவியையே தூக்கி வீசி தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியின் முடிவை கண்டு எங்களுக்கு பெருமையாக உள்ளது.

ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

தலைமை நீதிபதி தஹில் ரமணியின் இடமாறுதலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் அமைதியான முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 4 லட்சம் வழக்குகளை விசாரித்து வரும் பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டில் இருந்து மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியை இடமாறுதல் செய்தது வேதனைக்குரியது. அந்த முடிவை சுப்ரீம் கோர்ட்டு மறு பரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com