

போபால்:
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது.
மத்திய பிரதேச மாநிலத்துக்கு 2018-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளராக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தேர்வு செய்ய மூத்த தலைவர் கமல்நாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியும், 9 முறை எம்.பி.யாக தேர்வான அவர் இதுகுறித்து கூறியதாவது:-
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவே பொருத்த மானவர். இதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கலாம். அவர்தான் கடும் போட்டியை கொடுப்பார். சிந்தியாவின் பெயரை ராகுல்காந்தி முடிவு எடுத்து அறிவிப்பார்.
இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார்.
தற்போதைய சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு 166 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 50 எம்.எல். ஏ.க்கள் இருக்கிறார்கள்.