அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு: இன்று ஓரிரு இடங்களில் கனமழை

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு: இன்று ஓரிரு இடங்களில் கனமழை
Published on

சென்னை:

குமரி கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் தென் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி லட்சத்தீவு பகுதிக்கு சென்று விட்டது.

பொதுவாக குமரி கடல் பகுதியில் புயல் உருவானது கிடையாது. இதற்கு முன் 1962-ம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் உருவான புயல் தனுஷ்கோடியை தாக்கி ஊரையே அழித்ததுடன் தென் மாவட்டங்களில் கடுமை யாக மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

அதன்பிறகு புயல் உருவானது இல்லை. காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி பெருமளவில் மழை பெய்து வந்தது.

தற்போது 55 ஆண்டுகளுக்கு பின் ‘ஒக்கி’ புயல் உருவாகி தென் மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.  காற்றின் வேகம் காரணமாக புயலும் வேகமாக உருவாகி அதே வேகத்தில் அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிட்டது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் மலாய் தீபகற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தெற்கு அந்தமான் கடல் வரை வலுவாக பரவியது.

இது மேலும் தீவிரம் அடைந்து அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக (காற்றழுத்த மண்டலம்) மாறுகிறது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்த 3 அல்லது 4 நாட்களில் புயல் சின்னமானது சென்னை உள்பட வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது.

இதன் காரணமாக 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் இன்று காலை அறிவித்துள்ளது.

புயல் சின்னம் வடக்கு தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னையை தாக்கும் அபாயம் உள்ளது. காற்று வீசும் திசை மற்றும் அதன் வேகத்தை பொறுத்து அது கரையை கடக்குமா? அல்லது ஆந்திராவை நோக்கி நகருமா? என்பது அடுத்த 48 மணி நேரத்தில் தெரியவரும்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும். திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com