தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி
Published on

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தீபாவளிக்கு துணிகள் எடுப்பதற்காக காரில் பெங்களூரு சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது54) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த காரில் அசோகன், சித்ரா, அர்ஜூனன், கண்ணன், தன்யா, அஸ்வின், புவனேஸ்வரி, சரஸ்வதி, கோகுல்விஜய், ரம்யா, ஜனார்த்தனன், பத்மாவதி ஆகிய 12 பேர் சென்றனர்.

பெங்களூருவில் துணிகள் வாங்கி விட்டு நேற்று சேலத்துக்கு திரும்பி வந்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அடுத்த குரும்பட்டி மேம்பாலம் அருகே நள்ளிரவு 1 மணிக்கு வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் லாரியின் அடியில் சிக்கி நொறுங்கியது.

இந்த விபத்தில் அசோகன் மனைவி சித்ரா (50) அவரது மகன் அர்ஜூனன் (33), கண்ணன் (40), இவரது மகள் தன்யா (5) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்தியே பலியானார்கள். அவர்களது உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பலியான கண்ணன் பழனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அர்ஜூனன் அன்னதானப்பட்டி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார்.

இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இறந்த 4 பேரில் உடல்களை பார்த்து கதறி அழுதனர். மேலும் விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் அர்ஜூனன் மட்டும் தான் சென்று பெங்களூருவில் அனைவருக்கும் தீபாவளிக்காக துணிகள் வாங்கி வருவது வழக்கம்.

இந்த வருடம் 4 நாட்கள் விடுமுறை என்பதால் குடும்பத்தினர் அனைவரையும் காரில் அழைத்து சென்று துணி எடுத்து வரும்போது இந்த விபத்து நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com