ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் லாரி மோதி பலி- உறவினர்கள் சாலை மறியல்

நார்த்தாமலை அருகே ஓய்வுபெற்ற ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார். மேலும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் லாரி மோதி பலி- உறவினர்கள் சாலை மறியல்
Published on

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், காவேரிநகர் பகுதியை சேர்ந்தவர் பசுபதி (வயது 60). இவர் ஆயுதப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடிமலை என்னும் இடத்தில் சென்ற போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி பசுபதி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கீரனூர் போலீசார் மற்றும் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பசுபதி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கீரனூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே போலீசார் பசுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com