வாடகை காரை 8 மணி நேரத்துக்கு மேல் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து

வாடகை காரை 8 மணி நேரத்துக்கு மேலாக ஓட்டினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

சென்னை:

வாடகை காரை 8 மணி நேரத்துக்கு மேலாக ஓட்டினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2016-ல் 17,218 பேரும், 2017-ல் அக்டோபர் மாதம் முடிய 14,077 பேரும் சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர்.

சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90 சதவீதம் சாலை விபத்துக்கள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் டிரைவர்களுக்கு உண்டாகும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுகிறது என தெரிய வருகிறது.

தமிழகத்தில் ஏற்படக் கூடிய சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கும் சுற்றுலா வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.

அவர்களால் ஏற்படும் சாலை விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைக்கும் பொருட்டு 1988-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961-ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரையறைகளை கடைப்பிடிக்குமாறு தகுந்த அறிவுரைகள் சாலை பாதுகாப்பு ஆணையதால் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மிகாமலும் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் மற்றும் வாரத்துக்கு ஒரு நாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள் ஒரு பணி முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக் கூடாது. ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும்.

சட்ட விதிகளை மீறும் ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்ட விதிகளை மீறும் வாகனத்தின் அனுமதி சீட்டு மற்றும் தகுதிச் சான்றுகள் போக்குவரத்து துறையினரால் புதுப்பிக்கப்படமாட்டாது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் பொருட்டு சட்டவிதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com