

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெஸ்லே பால் பவுடர் உலகத்தரம் வாய்ந்தது என்று விளம்பரம் வருகிறது. ஆனால் அதில் காஸ்டிக் சோடா, பிளச்சிங் பவுடர் கலந்து இருக்கிறது. அதேபோல், ரிலையன்ஸ் கம்பெனியின் பால் பவுடரிலும் கலந்துள்ளது. சென்னையில் உள்ள மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் தான் இதை பரிசோதித்து இருக்கிறோம். இந்த காஸ்டிக் சோடா என்பது கெட்டுப்போன பாலின் அமிலத்தன்மையை குறைப்பதற்காக அது சேர்க்கப்படுகிறது.
அமிலத்தன்மை குறைந்ததும் அதை பாலாக்காமல் பால் பவுடராக மாற்றிவிடுகிறார்கள். இதை மீண்டும் சுடுதண்ணீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் ஏற்படும். ரசாயனப்பொருள் இல்லை என்று சிலர் கூலிக்காக பேசிக்கொண்டு இருந்தார்கள். ரசாயனம் கலந்து இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்.
ஆவின் பால், தயிர், பால் பவுடரை தனியார் நிறுவனங்கள் எடுத்து சென்று பரிசோதனை செய்து இருக்கிறார்கள். பரிசோதனை அறிக்கையில் ஆவின் பால், தயிர், பால் பவுடர் நல்லது என்று கூறி இருக்கிறது.
கலப்படம் செய்த தனியார் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் அவர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதால் தான் நான் கடந்த மாதம் இதை வெளிக்கொண்டு வந்தேன்.
மாதவரத்தில் உள்ள பரிசோதனை மையத்தில் கிடைத்த பரிசோதனை முடிவில் தான் அதை சொன்னேன். உலகத்தரம் வாய்ந்த இந்த நிறுவனத்தின் பால் பவுடரிலேயே கலப்படம் இருக்கிறது என்றால், சிறிய நிறுவனங்களை சற்று யோசித்து பாருங்கள். தனியார் பாலில் கலப்படம் செய்வது தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் சொன்ன அந்த 2 நிறுவனங்களில் தான் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறதா?
பதில்:- இப்போது வரை இந்த 2 நிறுவனங்களில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பரிசோதனை அறிக்கை வந்ததும் உங்களை அழைத்து சொல்கிறேன்.
கேள்வி:- நீங்கள் நேரடியாக பரிசோதனை செய்ய இந்த பால் பொருட்களை அனுப்பினீர்களா?
பதில்:- நாங்கள் அதை செய்து கலப்படம் இருக்கிறது என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் நம்பமாட்டேன் என்கிறார்கள். அதனால் ஒரு பத்திரிகையாளரை வைத்து இந்த பரிசோதனையை செய்து இப்போது வெளியிடுகிறோம்.
கேள்வி:- இந்த நிறுவனத்தின் பால் பவுடர்களை உடனடியாக நிறுத்த தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
பதில்:- முதல்-அமைச்சரிடம் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்படுமா?
கேள்வி:- நீங்கள் அறிவித்தது முதல் இந்த பால் பவுடர்களுக்கு தடை என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில்:- அதை உடனடியாக சொல்லிவிடமுடியாது. முதல்-அமைச்சரிடம் கேட்டு தான் சொல்ல முடியும். உடனடியாக முதல்-அமைச்சரிடம் பேசி இதன் விற்பனையை தடை செய்வோம்.
கேள்வி:- அதுவரை பொதுமக்கள் அதை வாங்கி பயன்படுத்தலாம் என்று சொல்கிறீர்களா?
பதில்:- மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். அவர்கள் வாங்காமல் இருப்பது நல்லது.
கேள்வி:- அதை தடை செய்ய மாட்டீர்களா?
பதில்:- தடை செய்யும் அதிகாரம் எனக்கு இருந்தால், இப்போதே அதை தடை செய்து இருப்பேன். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இதுதொடர்பாக தகவல் கொடுக்க இருக்கிறேன்.
கேள்வி:- முதல்-அமைச்சரிடம் இதுதொடர்பாக தகவல் கொடுத்துவிட்டீர்களா?
பதில்:- அவரிடம் ஏற்கனவே இது சம்பந்தமாக பேசிவிட்டேன். இதுகுறித்து ரகசியமாக நடவடிக்கை எடுத்து, எந்த பாலில் கலப்படம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள் என்று என்னிடம் சொன்னார்.
கேள்வி:- மக்களுக்கு நல்லது செய்யும் உங்களுக்கு கட்சியில் எதிர்ப்பு இருக்கிறதே?
பதில்:- கலப்படம் செய்பவர்கள் யாருக்கு வேண்டும் என்றாலும் பணம் கொடுத்து பேச வைக்கலாம்.
கேள்வி:- சட்டரீதியாக கலப்படம் செய்த தனியார் நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?
பதில்:- இந்த வழக்கை உறுதிப்படுத்த வேண்டும். தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். தனியார் நிறுவனத்தின் பால் பவுடரை தடை செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய இலக்கு. முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை செயலாளர், பால்வளத்துறை மேலாண்மை இயக்குனர், செயலாளருக்கும் முறைப்படி கடிதம் கொடுத்துவிடுவேன். முதல்-அமைச்சரை நேரடியாக சந்திக்க இருக்கிறேன்.
கேள்வி:- தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்ததாக குற்றம்சாட்டினீர்கள்? அதன் கலப்படம் நிரூபிக்கப்பட்டதா? அதை எப்போது சொல்வீர்கள்?.
பதில்:- 4 நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்ததற்கான ஆதாரம் இருக்கிறது. அதை நம்முடைய பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்து வெளியிட்டால் நம்பமாட்டார்கள். ஆகவே அதை வெளியிடவில்லை. நேரம் வரும்போது வெளியிடுவோம்.
கேள்வி:- நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கும் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம். எனவே இதுதொடர்பாக பிரதமரிடம் எதுவும் தெரிவிப்பீர்களா?
பதில்:- நிச்சயமாக பிரதமருக்கும் இதுதொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்ப இருக்கிறேன்.
கேள்வி:- இந்த நிறுவனத்தின் மற்ற பொருட்களும் ஆய்வு செய்யப்படுமா?
பதில்:- அதுமட்டுமல்ல. இதேபோல் ஏராளமான நிறுவனத்தின் பொருட்களை ஆய்வு செய்து வைத்து இருக்கிறேன். அது தொடர்பாக அடிக்கடி உங்களை சந்திக்க இருக்கிறேன். பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாது, பல்வேறு பொருட்களில் கலப்படம் செய்கிறார்கள். அதை எடுத்து அனுப்பி இருக்கிறேன். தமிழ்நாட்டில் இனி யாரும் கலப்படம் செய்ய முடியாது. இது மக்களின் உயிர்நாடி பிரச்சினை. இதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.
கேள்வி:- நாட்டுக்கே நல்லது செய்தது உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைக்கிறோம்?
பதில்:- நல்ல பெயருக்காக நான் இதை செய்யவில்லை. எங்கள் வீட்டிலே இருவர் புற்றுநோயால் இறந்து இருக்கிறார்கள். எல்லாம் இந்த பால் பவுடர், பால் சாப்பிட்டவர்கள் தான். யாருக்கும் இதனால் பிரச்சினை வரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இதில் தீவிரமாக இறங்கி இருக்கிறேன். கடந்த 3 மாதங்களாக இந்த பணியை தான் செய்தேன். கலப்படம் இல்லாத பாலை தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எண்ணம்.
கேள்வி:- பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து இருக்கிறீர்கள். அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஏதாவது முயற்சி எடுத்தால் என்ன செய்வீர்கள்?
பதில்:- எனக்கு அதை பற்றி கவலையே கிடையாது.