

தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள திப்பேன அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதராவ். இவருடைய மகன் சங்கர் ராவ் (வயது 20). இவர் பெங்களூரு அருகே உள்ள ஆணைக்கல் பகுதியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று வீட்டில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்றனர். சங்கர்ராவ் மட்டும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார்.
பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவர்கள், வீட்டில் தனியாக இருந்த சங்கர்ராவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிராமத்தில் பல இடங்களில் தேடி பார்த்ததில் திப்பேன அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சங்கர் ராவ் அணிந்திருந்த துணிகள் கிடந்தது.
இதனால் ஏரியில் குளித்த போது, அவர் தண்ணீரில் மூழ்கி இருப்பாரோ? என சந்தேகம் அடைந்தனர். இது பற்றி உடனடியாக தளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு தளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தேன்கனிக் கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ஏரியில் மூழ்கி, சங்கர் ராவை தேடினார்கள்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள், இறந்த நிலையில் சங்கர் ராவ் உடலை கண்டுபிடித்தனர். பின்னர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். உறவினர்களும் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாணவன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இது பற்றி போலீசார் கூறுகையில், மாணவன் ஏரியில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றிருக்கலாம். அப்போது, கால் சேற்றில் சிக்கி நீரிழ் மூழ்கி இறந்திருக்கலாம். ஏரியில் சங்கர் ராவ் மட்டும் குளித்தாரா? அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளித்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.