தினகரன் பிளாக் மெயில் பேர்வழி, சசிகலா செல்லாக்காசாகி விட்டார்: குமார் எம்.பி. ஆவேச பேட்டி

சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் போல செல்லாத காசுகளாக உள்ளனர் என்று குமார் எம்.பி. குற்றம் சாட்டினார்.
தினகரன் பிளாக் மெயில் பேர்வழி, சசிகலா செல்லாக்காசாகி விட்டார்: குமார் எம்.பி. ஆவேச பேட்டி
Published on

திருச்சி:

அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி எம்.பி. குமார் நீக்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதனை கண்டித்து திருச்சியில் குமார் எம்.பி.யின் ஆதரவாளர்கள் தினகரனின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் திருச்சி எம்.பி. குமார் ஆவேசமாக பேட்டியளித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் இளைஞர் பாசறை செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகவும், 2-வது முறையாக எம்.பி.யாகவும் பணியாற்றி வருகிறேன். தினகரன் என்னை கட்சி பதவியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்க நாணயங்களாக பணியாற்றி வருகிறோம்.

ஆனால் சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் போல செல்லாத காசுகளாக உள்ளனர். அவர்களுக்கு கட்சியினரிடமும், பொது மக்களிடமும் மதிப்பில்லை.

செல்லாத காசுகளாக உள்ள தினகரன், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருவது நாளுக்கு நான் அவருடைய நிலை மாறி வருகிறது தெரிகிறது.

33 ஆண்டுகள் ஜெயலலிதா பொதுசெயலாளராகவும், முதல்வராகவும் இருந்த காலங்களில் சசிகலாவும், அவரது குடும்பமும் அவரையும் அவரது பதவியையும் பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி கொண்டனர். இன்று பழனிசாமி, அனைத்து நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.

ஆனால் தினகரன், பல்வேறு மாவட்டங்களில் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சிலரை சேர்த்து கொண்டு கட்சியிலும் ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

21 எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்து முதல்வரையும், அமைச்சர் , எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என அனைவரையும் பிளாக் மெயில் செய்து வருகிறார். 33 ஆண்டுகள் ஜெயலலிதாவோடு இருந்து பதவி சுகங்களை அனுபவித்தவர்கள் அவற்றில் இருந்து மீள முடியாமல் கட்சியையும், ஆட்சியையும் தன்வசப்படுத்த பிளாக் மெயில் செய்கின்றனர்.

தினகரன் ஒரு பிளாக் மெயில் பேர்வழி. தினகரன் மீது கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க. விற்கும் நல்லது செய்ய வேண்டுமென கோர்ட் நினைத்தால், அந்த வழக்கை விரைவாக நடத்தி தினகரனுக்கு தண்டனை கொடுத்தால் தமிழகம் நிம்மதியாக இருக்கும்.

தமிழகம் மற்றும் அ.தி.மு.க. வின் நலன் கருதி அவர்கள் ஒதுங்கி கொள்ள வேண்டும். தினகரனையும் அவரது குடும்பத்தையும் மக்கள் எந்த காலத்திலும் ஏற்று கொண்டதில்லை.

33 ஆண்டுகள் அவர்கள் ஜெயலலிதாவோடு இருந்தாலும் மன்னார்குடியில் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் செல்வாக்கு அவ்வளவு தான். ஆர்.கே.நகரில் தன்னைத் தானே வேட்பாளராக அறிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போதுதான் வெற்றி பெற வேண்டும் என்ற சுய லாபத்திற்காக சசிகலா படத்தை போடாமல் பிரச்சாரம் செய்தார்.

சிறைக்கு சென்றால் அங்கு தண்டனை அனுபவிக்காமல் சுகபோகமாக இருந்து வருகிறார் சசிகலா. இது போன்று எப்போதும் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தமிழகத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டும். நடிகர் செந்திலை அமைப்பு செயலாளராக நியமித்து கட்சியை காமெடி யாக்கி விட்டார்.

2009-ல் எனது வெற்றியை எதிர்த்த சாருபாலாவிற்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கியிருக்கிறார். ஜெயலலிதாவால் கட்டுக் கோப்பாக வைத்திருந்த கட்சியை இன்று தலை கீழாக மாற்றி கட்சியையும் ஆட்சியையும் மாற்ற நினைக்கிறார். அது நடக்காது.

ஜெயலலிதாவில் நியமிக்கப்பட்ட என்னை போன்ற தங்க நாணயங்களின் பதவியை நீக்க அந்த செல்லாக்காசிற்கு எந்த தகுதியும் இல்லை. தொடர்ந்து இளைஞர் பாசறை பணியை மேற் கொள்வேன். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் உரிய விசாரணை நடத்தும். வருகிற 28-ந்தேதி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு குமார் எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com