தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது- கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என்று ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது- கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சந்திரபிரபாமுத்தையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

மறைந்த முதல்வர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா வழியில் இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். நல்லாட்சி நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் ஒழித்துகட்ட வேண்டும் என்றும் சிலர் திட்டம் போட்டு வேலை செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா கிடையாது, கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை. இந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தால் ஆட்சியை பிடித்து விடலாம் என்று சிலர் கொடுத்த தவறான ஆலோசனையால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துள்ளார். ஒத்தக்கடையில் கட்சி ஆரம்பித்த அவர் ஒத்தையில்தான் நடந்து செல்வார்.

தனி வாழ்வில் ஒழுக்கம் இல்லாத அவரை நம்பி இளைஞர்கள் செல்ல தயாராக இல்லை. அ.தி.மு.க.வில் இளைஞர்கள் அதிகமாக ஆர்வமாக பணியாற்றி வருகின்றனர். 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா ஆசைப்படி இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றிபெறும்.

வத்திராயிருப்பு போன்ற கிராமங்களில் அ.தி.மு.க.வில் வெறித்தனமான தொண்டர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். வத்திராயிருப்பு உட்பட சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏராளமான சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

எப்போது தேர்தல் வந்தாலும் நாட்டு மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். 1 கோடியே 83 லட்சம் ஏழைகளுக்கு இந்த ஆட்சியில் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் மதக்கலவரம் கிடையாது, ஜாதிக்கலவரம் கிடையாது, மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

இவ்வாறுஅவர் பேசினார்.

தலைமை கழக பேச்சாளர் சோலைமுத்து, மகளிர் இணைச் செயலாளர் சக்தி கோதண்டம், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன், ஒன்றிய செயலாளர் மயில்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை வத்ராயிருப்பு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் செய்திருந்தார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com