

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான வாய்ப்புகள் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தினகரனுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானமும், ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மத்துக்கு விடை காண நீதி விசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை நெருங்க செய்தது.
அணிகள் இணைப்பு தொடர்பாக இரு தரப்பிலும் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதேசமயம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டதால், அங்கு அணிகள் இணைப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. இதற்காக தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், ஓபிஎஸ் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனையின்போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலாகா ஒதுக்கீடு மற்றும் நிர்வாக பொறுப்புகள் ஒதுக்கீட்டில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இணைப்பு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.